யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு 2026: “ஆய்வு, மறுவடிவமைப்பு, மீள்நிர்மாணம்”
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத்துறையும், இந்தியாவின் சுரானா மற்றும் சுரானா (Surana & Surana) சட்ட நிறுவனமும் இணைந்து நடத்தும் யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு, எதிர்வரும் தை மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் (ஜனவரி 24, 25) யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் முதல் நாளன்று பிரதம விருந்தினராக உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரம்பிள்ளை துரைராஜாவும், கௌரவ விருந்தினராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தலைவர் நீதிபதி ரோகத்த அபேசூரியவும் சிறப்பு விருந்தினராக, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளருமான சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
முதல்நாள் நிகழ்வின் பிரதான அம்சமாக “சட்டத்தின் எதிர்காலம் ஆட்சி நிர்வாகம், தொழிநுட்பம், சமூகம் மற்றும் உலக பொருளாதாரம்” எனும் தொனிப்பொருளின் கீழான குழுக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
மேலும் அன்றைய தினத்தின் பிரதம உரையாளர்களாக இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் நிர்வாக இயக்குனரான கலாநிதி மரியோ கோமெஸிம், பாரிஸ்டர் ஸாரா மண்டிவல்லா அக்பரால்டும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாலை 6 மணி முதல் 9 மணி வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் யாழ். மண்ணின் கலை நிகழ்வுகள் நடைபெறும்.
இரண்டாம் நாள் விருந்தினர்களாக உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட (பிரதம விருந்தினர்), மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கலாநிதி பிராங்க் குணவர்தன ஆகியோா் கலந்து கொள்ளவுள்ளனா்.
அன்றையதினம் சூழல், காலநிலை மாற்றம், வணிகம் மற்றும் எண்ணியல் பொருளாதாரம் உள்ளிட்ட 5 தலைப்புகளின் கீழ் ஆய்வாளர்கள் கட்டுரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதேவேளை மாநாட்டின் ஒரு அங்கமாக, நாளை (ஜனவரி 23) பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் “மக்களின் பங்கேற்பு” குறித்த விசேட அமர்வு இடம்பெறவுள்ளது. இதில் கலாநிதி அகிலன் கதிர்காமர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உரையாற்றவுள்ளனர்.

