நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சந்திப்பு..!
நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் கெளரவ H. E. Wiebe De Boer அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (21.01.2026) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் மீள்குடியேற்ற நிலைமைகள், இந்தியாவிலிருந்து மீளக்குடியமர்ந்த குடும்பங்கள் மற்றும் மீளக்குடியமரவுள்ள குடும்பங்கள் தொடர்பாகவும், அக் குடும்பங்களின் வாழ்வாதார நிலைப்பாடுகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்து கொண்டார் .
விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் அத் துறைகளின் நவீனமயமாக்கல் தொடர்பாகவும், மாவட்டத்தின் தற்போதைய சமூக பொருளாதார நிலவரங்கள், தீவக அபிவிருத்தி குறிப்பாக முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் டித்வா புயல் பாதிப்புக்கள் தொடர்பாகவும் அரசாங்க அதிபர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், யாழ்ப்பாண கோட்டை தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் வினாவிய போது, தற்போது யாழ்ப்பாண கோட்டை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளதாகவும், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாவிகள் அதிகம் வருகைதரும் இடமாகவும், தொல்லியல் திணைக்களம் மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்த வகையில் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி முன்னெடுக்கப்படவேண்டும் என்பதுடன் உள்பகுதியில் சுற்றுலாவிகளை கவரக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்ய வேண்டிய தேவைப்பாடுகளை உயர்ஸ்தானிகருக்கு அரசாங்க அதிபர் விபரித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாண கோட்டை அபிவிருத்தி சம்பந்தமாக அக்கறை செலுத்தி பரிசீலிப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தீவுப் பகுதி சுற்றுலா அபிவிருத்தி குறிப்பாக நெடுந்தீவு பிரதேச சுற்றுலா அபிவிருத்தி தொடர்பாகவும் அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் நெதர்லாந்து தொடர்பான ஆவணப் புத்தகம் அரசாங்க அதிபரிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சந்திப்பில் நெதர்லாந்து உயர்ஸ்தானியகத்தின் அரசியலுக்கான சிரேஷ்ட ஆலோசகர் திரு. நாமல் பெரேரா அவர்களும், கலாசார ஆலோசகர் திரு. கிறைசனி மெண்டிஸ் அவர்களும் உடனிருந்தார்கள்.

