கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு..! சஜித்

கல்வியை ஆபாசமாக்கும் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு..!
சஜித்

கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் எதிர்க்கவில்லை எனவும், கல்வியில் ஆபாசத்தைப் புகுத்தும் நடவடிக்கைகளையே தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், கிதுல்கல பிரதேச வைத்தியசாலைக்கு 33 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை இன்று (17) வழங்கி வைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்த முன்னெடுப்புகள் குறித்துப் பல கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

கல்விச் சீர்திருத்தங்கள் முறையான ‘Green Paper’ அல்லது ‘White Paper’ ஆவணங்கள் மூலம் முன்னெடுக்கப்படாமல், வெறும் ‘PowerPoint’ விளக்கக்காட்சிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.

தரம் 1 முதல் 6 வரையிலான கல்விச் சீர்திருத்தங்களுக்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால், பாடத்திட்டங்கள் முறையாக மீளாய்வு செய்யப்படாததால், அதில் ஆபாசமான விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இதனையே நாம் எதிர்க்கிறோம் என அவர் விளக்கமளித்தார்.

எதிர்க்கட்சி சார்பில் ‘பிரபஞ்சம்’ திட்டத்தின் கீழ் ஆங்கிலம், சீனம், ஜப்பானிய மற்றும் இந்தி மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது கிண்டல் செய்த அமைச்சர்களே இன்று கல்விச் சீர்திருத்தம் பற்றிப் பேசுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக, அரச அதிகாரம் இல்லாமல் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்குப் பெறுமானம் சேர்க்கும் பணியை நாம் முன்னெடுத்து வருகிறோம்” என சஜித் பிரேமதாச இதன்போது பெருமிதம் தெரிவித்தார். மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும், நோயாளிகளைக் குணப்படுத்தவுமே இவ்வாறான மருத்துவ உபகரணங்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin