காரமுனை மக்களின் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும்..!
கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் எம்.பி சபையில் கோரிக்கை.
“மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை வடக்கு காரமுனையில் பரம்பரையாகப் புத்தத்துக்கு முன் வசித்த மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்படவில்லை” – என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (07) நிலையியல் கட்டளை 27இன் கீழ் 2இல் விசேட கூற்றை முன்வைத்தே இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை 211G வாகரை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாங்கணி தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் காணப்படுகின்ற ஒரு கிராமம். இது கிட்டத்தட்ட 200 வருடம் பழமையானது. இருந்த போதிலும் உள்நாட்டிலே ஏற்பட்டு யுத்த சூழ்நிலை காரணமாக அவர்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதனால் அவ்வக்களின் ஆவணங்களும் தொலைந்து விட்டன.
அவர்கள் வெளியேற்றப்பட்டபோதும் தமது சொந்த வீடுகளை, வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்தார்கள். அவர்களின் வாழ்வாதாரமாக அப்போது விவசாயம், கால்நடை வளர்ப்பு, மேட்டு நிலப் பயிர் செய்கை போன்றவற்றை மேற்கொண்டு வந்தார்கள். மேலும் தமது அன்புக்குரியவர்களின் பல உயிர்களையும் இழந்தனர்.
இலங்கையில் உள்ள நாட்டுப் புத்த மதுவந்ததன் பின்னர் 2009ஆம் ஆண்டளவில் தாம் பூர்வீகமாக வாழ்ந்த காரமுனை கிராமத்திலே மீண்டும் அவர்கள் வசிக்கச் சென்றார்கள்.
1956ஆம் ஆண்டு விவசாய நிலங்களுக்குக் வழங்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு உறுதி வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 1983 ஆம் ஆண்டு வாகரை பிரதேச செயலகத்தினால் மீள பொதுமக்களிடம் அந்த ஒப்பந்தங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டவுடன் அவற்றைப் பெற்றுக் கொண்ட அதிகாரி பற்றுச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரைக்கும் புதிதாக விவசாய நிலங்கள் ஒப்பந்தங்கள் வழங்கப்படவில்லை.
அண்ணளவாக, 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாயக் காணி காணப்படுகின்றது.
காரமுனை மக்கள் 2011, 2012, 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு அண்ணளவாக 100க்கும் மேற்பட்டவர்கள் காணிக்கச்சேரிக்கு விண்ணப்பித்தும் இதுவரையும் அவர்களுக்கு காணிக்கச்சேரி நடத்தப்படவில்லை.
வாகரை பிரதேச செயலகத்தால் இதுவரைக்கும் சுமார் ஒன்பது காணிக்கச்சேரிகள் நடத்தப்பட்டு 3,450 பேருக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
காணி அனுமதிப்பத்திரம் இன்மையினால் பிரதேச செயலகத்தின் தத்தமது நிர்வாக ரீதியான தேவைகளை நிறைவே செய்வதற்கும் அரசு உதவிகளைப் பெறுவதும் பல்வேறு பட்ட அசௌகரியங்களை பரம்பரை பரம்பரையாக எதிர்கொண்டு வாழ வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதற்காக கையொப்பம் பெறுவதற்கு பல மாத காலம் பிரதேச செயலகத்துக்கு அலைய வேண்டியுள்ளது. வாகரை பிரதேச செயலாளர் இம்மக்களின் காணி தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
யுத்தக்காலத்தில் மக்கள் வேளாண்மை பயிர்ச் செய்கைக்குட்படுத்தப்பட்ட காணி என்று அடையாளப்படுத்தி வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படுகின்ற சுமார் 2000 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது.
ஆனால், பரம்பரையாக காலம் காலமாக யுத்தத்துக்கு முன் வசித்த அபிவிருத்தி செய்யப்பட்ட மக்களின் காணியை விடுவிப்பதற்கு தேவையான எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரைக்கும் வாகரை பிரதேச செயலாளரால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்தச் சபையிலே இதுகுறித்து நான் கேள்வி எழுப்பியபோது காணி ஆணையாளர் ஊடாக ஒரு விசேட குழுவை நியமித்து காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக காணிப் பிரதியமைச்சர் பதிலளித்திருந்தையும் நான் நினைவு கூறுகிறேன்.” – என்றார்.

