தீவக அபிவிருத்திக்கு ஒதுக்கிய 250 மில்லியன் திரும்புகிறது.. மீளப் பெறப்பப்படும் என்கிறார் அமைச்சர்.
யாழ் மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் செலவு செய்யப்பட முடியாமையால் மீளத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஒருங்கிணைப்பு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் விமல் ராட்நாயக்காவின் பணிப்பின் பேரில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு தீவக வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக வீதி அபிவிருத்திகளை உரிய காலப் பகுதியில் நிறைவேற்ற முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.
இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் 250 மில்லியன் ரூபாய் செலவு செய்யபட வேண்டும் ஆனால் காலப்பகுதி போதாமயால் அதனை மீள திருப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறித்த விடையம் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடி குறித்த நிதியை மீள எதிர்வரும் 2026 பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்

