ஆந்திராவிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு கஞ்சா கடத்தல்: மென்பொருள் பொறியியலாளர் உட்பட 8 பேர் கைது!
ஆந்திரா-ஒடிசா எல்லைப் பகுதியிலிருந்து தமிழகம் ஊடாக இலங்கைக்கு உயர் ரக கஞ்சாவை கடத்த முயன்ற மென்பொருள் பொறியியலாளர் மற்றும் “லேடி டான்” எனப்படும் பெண் உட்பட 8 பேரை ஆந்திர மாநில காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் இந்தக் கடத்தல் கும்பலில் இணைந்து செயற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் நர்சிபட்டினம் பகுதியில் இருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு இந்த போதைப்பொருள் கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கும்பலின் முக்கிய புள்ளியாக “லேடி டான்” என்று அழைக்கப்படும் ரேணுகா என்ற பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார். அந்தத் தொடர்பைப் பயன்படுத்தி கஞ்சா பொதிகளை தமிழகம் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்கு இவர் திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது நடவடிக்கையின் போது கடத்தல்காரர்களிடமிருந்து 74 கிலோகிராம் கஞ்சா, ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல கையடக்கத் தொலைபேசிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திரா-ஒடிசா எல்லையூடாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென ஆந்திர மாநில காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

