பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில்

பழைய பூங்காவினுள் தான் உள்ளக விளையாட்டரங்கு..! பணிகள் துரித கதியில்

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு பணிகள் துரித கெதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் 12 பரப்பளவுக் காணியைக் கையகப்படுத்தி, அதில் 370 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை அமைப்பதற்கு கடந்த 23ஆம் திகதியன்று அடிக்கல் நடப்பட்டது.

அந்நிலையில், பழைய பூங்காவில் நூற்றாண்டு காலப் பழமையான மரங்கள் காணப்படும் நிலையில் அவற்றை அழித்து உள்ளக விளையாட்டரங்கு அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கிருஷ்ணவேணி சிறிதரன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுதாரரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகி பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் வகையில், கடந்த 05ஆம் திகதி 14 நாட்களுக்கான கட்டாணை பெற்றிருந்தார்.

குறித்த 14 நாள்களைக் கொண்ட கட்டாணைக்காலம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுக்கப்பட்டது. இதன்போதே, கட்டாணை உத்தரவை நீடிப்பதற்கு நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தது.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் வழங்கியுள்ள கட்டளையில் உள்ளதாவது:

வழக்கானது தர்ம நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ், இரண்டுக்கும் குறையாத பயனாளிகள் சட்டமா அதிபரின் கையொப்பத்தைப் பெற்றே வழக்கைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்தக் கட்டாய தேவைப்பாடு பூர்த்தி செய்யப்படாமலேயே கட்டாணை பெறப்பட்டுள்ளது.

முகத்தோற்ற அளவில் வழக்கொன்று இருப்பதாக மன்று திருப்தியடைந்து கட்டாணையை வழங்கியுள்ள போதிலும், வழக்கேட்டை முழுமையாக ஆராய்ந்ததில், வழக்காளிக்கு வழக்கொன்று உள்ளதாக என மன்று திருப்தியடைய முடியாத நிலை காணப்படுகின்றது. வழக்காளிக்கு வழக்கைக் கொண்டு நடத்துவதற்கு சட்ட அந்தஸ்து உள்ளதா என நிச்சயமற்ற நிலை நிலவுவதால் கட்டாணையை நீடிக்க வேண்டிய தேவை அற்றுப்போயுள்ளது- என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து , தற்போது விளையாட்டரங்கினை துரித கெதியில் அமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை பழைய பூங்காவினுள் எவ்வித கட்டுமானங்களும் யாழ்ப்பாண மாநகர சபையினால், அனுமதி வழங்கப்பட மாட்டாது என கடந்த புதன்கிழமை நடைபெற்ற சபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin