25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்..!
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை – ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது, “நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள், ” பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டாது, அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குங்கள் “, ” அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்” இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
மேற்படி வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 25,000 ரூபா பணத்தை வழங்குவதற்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் , உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக ஒரு வழிப்பாதையாகவே வாகனங்கள் பயணித்தன.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவர்களின் கருத்துக்களையும் அமைதியான முறையில் கேட்டறிந்துகொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும், கணக்காளரும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குறிப்பிட்டனர்.
மேலும், 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் போது பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற முயற்சி செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
குறித்த கொடுப்பனவு வழங்குவதில் எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முயற்சி எடுப்பதாக இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் ஆகியோரினால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

