சிறுப்பிட்டியில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து !
யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் இன்று (18) அதிகாலை மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக காவு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் புதிய மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி, அருகில் இருந்த விவசாய நிலத்திற்குள் பாய்ந்துள்ளது.
சேத விபரங்கள்:
இந்த விபத்தில் தொலைத்தொடர்பு கம்பம் மற்றும் கனரக வாகனம் என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள்:
சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. விபத்து குறித்து அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


