வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவை..!

அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் – வேலணையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் அரசாங்க அதிபர் தெரிவிப்பு

 

சனாதிபதி செயலகத்தின் அனுசரணையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது பிரதேச செயலாளர் திரு. தனபாலசிங்கம் அகிலன் அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பங்குபற்றுதலுடன், வேலணை பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் (18.12.2025) காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

 

இவ் நடமாடும் சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மக்களுக்கு உரிய சேவையை உரிய நேரத்திலே வழங்க வேண்டியது அரசாங்க உத்தியோகத்தராகிய எமது கடப்பாடு எனவும், அதிமேதகு ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கமைவாக இவ் நடமாடும் சேவையை தயார்ப்படுத்திய பிரதேச செயலாளர், பிரதேச செயலக பதவிநிலை மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும், இவ் நடமாடும் சேவையானது யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக தீவுப்பகுதிகளில் நடாத்தப்பட்டு வருவதாகவும், இவ் நடமாடும் சேவையை நடாத்தும் போது மக்களின் பிரச்சினைகளை ஒரே இடத்தில் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்ததுடன், இப் பிரதேச செயலகத்தின் பல உத்தியோகத்தர்கள் யாழ் நகர்ப்பகுதிக்கு அப்பால் இருந்து தொடர்ச்சியாக பல வருடங்களாக அர்ப்பணிப்பான சேவையை ஆற்றி வருவதாகவும் அதற்காக தனது நன்றிகளையும் தெரிவித்தார்.

கடல் கடந்த தீவிலே இருக்கின்ற மக்கள், தங்களுடைய அரச சேவைகளை அல்லது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக, அவர்கள் பிரதேச செயலகத்தை அல்லது மாவட்ட செயலகத்தை நாடி செல்ல வேண்டிய தேவைப்பாடுகளை தவிர்க்கும் முகமாக நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட உத்தியோகத்தர்களை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அங்கே சென்று இச் சேவைகளை வழங்குகின்ற போது, சேவைகளை அவர்கள் இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் அந்த வகையில் நயினாதீவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும், கிராம மட்டத்திலே கடமையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது வெள்ள அனர்த்தம் நிலையில் தங்களுடைய பணிகளை எவ்வளவு சிறப்பாக ஆற்றினாலும், சமூகத்திலே அதற்குரிய எதிர் விமர்சனங்கள் சில கிடைக்கத்தான் செய்கின்றன எனவும், ஆதலால் கடமைகளில் மிக தெளிவாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தை பொறுத்தவரையிலே, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி வழங்குவதற்காக 365.6 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும்,

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான முறையிலே சேவைகளையும் உரிய கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க உத்தியோகத்தர்களை நம்பி இருப்பதால், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் நிவாரணம் கொடுப்பனவுகளை மக்களுக்கு, மக்கள் நலன் சார்ந்ததாக வழங்குவதில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்களாக இருப்பதால் இவ் நிவாரண கொடுப்பனவுகள் சரியான முறையிலே மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மக்களின் மனங்களில் நிலைத்திருக்கக்கூடிய வகையில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

 

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள், சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்றதுடன் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

 

மேலும், காணி உறுதிப்பத்திரம், கடற்றொழில் உபகரணங்கள் முதியவர்களுக்காக சக்கர நாற்காலி, தென்னங்கன்றுகள் என்பன தெரிவு செய்யப்பட்ட தகுதியான பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

 

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வேலனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், வேலனை பிரதேச செயலாளர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேசத்தினுடைய சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin