அனஸ்தீசியா மருந்தினால் இருவர் மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

அனஸ்தீசியா (மயக்க மருந்து) தொடர்பில் பயன்படுத்தப்படும் ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) மருந்துத் தொகுதியினால் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

மயக்க மருந்து வழங்கும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பதற்காகவே பொதுவாக இந்த ‘ஒன்டன்செட்ரான்’ பயன்படுத்தப்படுவதாக ஊடகங்களிடம் அவர் விளக்கமளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மில்லியன் கணக்கான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தபோதிலும், நவம்பர் மாதம் வரை எந்தவொரு பாரதூரமான பாதிப்புகளும் பதிவாகவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த மாதம் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் ஐந்து நோயாளர்களுக்கு சிறு அளவிலான பக்கவிளைவுகள் ஏற்பட்டன. இது தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) ஆய்வுகளை மேற்கொண்டு, மிகுந்த அவதானத்துடன் மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளித்திருந்தது.

இருப்பினும், நவம்பர் 12ஆம் திகதி நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த மருந்து தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அதற்கு முன்னதாகவே, கண்டி தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இந்த மருந்து குறித்து ஆய்வகச் சோதனைகளை முன்னெடுத்து அது தொடர்பான தரவுகளை வெளியிட்டிருந்தார்.

இதனடிப்படையில், சர்ச்சைக்குரிய குறித்த மருந்துத் தொகுதியை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தற்போது உத்தரவிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin