ஜனாதிபதியின் இராணுவ நியமனம் – மீண்டும் நிராகரித்தது அரசியலமைப்பு பேரவை !!
புதிய கணக்காய்வாளர் நாயகமாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஓ.ஆர். ராஜசிங்கவை நியமிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விடுத்த சிபாரிசை அரசியலமைப்பு பேரவை இன்று (17) உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் இன்று கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த பதவிக்காக ஜனாதிபதி இதற்கு முன்னரும் வழங்கிய சிபாரிசுகளை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்த பின்னணியில், இந்த புதிய சிபாரிசும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கணக்காய்வாளர் நாயகம் போன்ற சிவில் நிர்வாகப் பதவிகளுக்கு ஓய்வுபெற்ற படை அதிகாரிகளை நியமிக்க அரசு எடுத்து வரும் முயற்சிகள் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினரிடையே கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நியமனங்கள் சுயாதீன அரச நிறுவனங்களின் கட்டமைப்பை பாதிக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையிலேயே அரசியலமைப்பு பேரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

