கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்..!

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

“கொழும்பு மாவட்டத்துக்குள் சரியான திட்டமிடல் இல்லாமல், பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் கீழும், மிகவும் தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள்ளும் எடுக்கப்பட்ட தீர்மானங்களால் தான் கொழும்பு மாவட்ட மக்கள் இந்த முறையில் ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பது மிகவும் தெளிவாகிறது.

ஜனாதிபதி முன்வைத்ததன் படி, இனிமேல் இந்த விதமான அத்துமீறிய கட்டுமானங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் மக்கள் கட்டுமானங்களை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதை நாம் உறுதி செய்துள்ளோம்.

கொழும்பு மாவட்டத்தின் ஆபத்தான பகுதிகளில் வாழும் மக்களுக்கு மாற்று வழிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் கலந்துரையாடினோம்.”

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காக பொதுவான திட்டமொன்றை முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

“திட்டமிடல் இல்லாமல், சட்டதிட்டங்கள் பற்றி எந்தவித மதிப்பீடும் இல்லாமல், கொழும்பு மாவட்டத்தின் அபிவிருத்தி என்ற பெயரில் அத்துமீறிய கட்டுமானங்களை மேற்கொள்ளவும், குடியிருப்புகளை உருவாக்கவும் இடமளிக்க முடியாது.

எனவே, கொழும்பு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் விதமாக, கொழும்பு மக்களுக்கு வருடாந்த வெள்ளப்பெருக்கு வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறும் ஒரு சூழ்நிலைக்கு நாம் எந்த விதத்திலும் இடமளிக்க மாட்டோம்.

அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நாம் பேசினோம்.

அதன்படி, அனைத்து நிறுவனங்களும் இணைந்து கொழும்பு மாவட்டத்தின் வெள்ளக் கட்டுப்பாட்டிற்காக ஒரு பொதுவான திட்டத்தை முன்வைத்து, அதன்படி செயற்பட வேண்டும் என்று நாம் பரிந்துரைத்துள்ளோம்.”

Recommended For You

About the Author: admin