பிரதான மார்க்க தொடரூந்து சேவையில் தாமதம்..!

அம்பேபுஸ்ஸ – அலவ்வ பிரதேசங்களுக்கிடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் இயங்குவதால், பிரதான மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, அம்பேபுஸ்ஸ – அலவ்வவுக்கு இடையில் அமைந்துள்ள புஜ்ஜொமுவ ரயில் நிலையம் அருகில் இருந்த ரயில் பாதையின் அடியில் உள்ள மதகு, அருகில் பாயும் மாஓயா ஆற்றை நோக்கித் தள்ளப்பட்டு உடைந்தது.

இதன் காரணமாக, ரயில் தண்டவாளத்தின் கீழ் சுமார் 45 அடி ஆழமான பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரயில் தண்டவாளத்தில் இருந்த தடைகளை அகற்றி, ரயில்வே திணைக்களம் நேற்று முன்தினம் (நேற்று) ரயில் பாதையை மீண்டும் சீரமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது, புனர்நிர்மாண வேலைகள் காரணமாக அம்பேபுஸ்ஸ – அலவ்வவுக்கு இடையில் ரயில் சேவை ஒருவழிப் பாதையில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பிரதான மார்க்கத்தில் பயணத் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று முதல் பிரதான மார்க்கத்தில் சில அலுவலக ரயில் சேவைகளை வழமைபோல் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: admin