காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்..!

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம்..!

“டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்த அல்லது காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

 

அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்தத் திணைக்களம், இந்த அனர்த்தத்தினால் எவரேனும் ஒரு நபரின் உறவினர் அல்லது நண்பர்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பின், அத்தகைய காணாமல் போன நபர்களின் இறப்பைப் பதிவு செய்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறது.

 

தேசிய அனர்த்தப் பகுதிகள், நிர்வாக மாவட்டங்கள் அடிப்படையில் இறப்பைப் பதிவு செய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ், டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

 

அதற்கமைய, இந்த அனர்த்தத்தின் கீழ் காணாமல் போன நபர் ஒருவரின் இறப்பைப் பதிவு செய்யக் கோரும் நபர், அந்த நபர் வழக்கமாக வசித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் தகவல்களுடன் கூடிய விண்ணப்பப் படிவத்தையும், அத்தகவல்களை உறுதிப்படுத்தும் சத்தியக்கடதாசியையும் சமர்ப்பிக்க வேண்டும்.

 

கிராம உத்தியோகத்தர் இந்தக் கோரிக்கையைப் பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிப்பார் என்பதுடன், பிரதேச செயலகத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திலும் இரண்டு வார காலத்திற்கு ஆட்சேபனைகளுக்காக இது காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனப் பதிவாளர் நாயகம் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

ஆட்சேபனைகள் இல்லையெனில், பிரதேச செயலாளரால் அனுமதிக்காகப் பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட வலயத்திற்குப் பொறுப்பான பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

 

ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டால், அது குறித்து விசாரணை நடத்திப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

 

இதன் கீழ், நபர் ஒருவர் காணவில்லை என்பதற்கான சான்றிதழ் கோரப்பட்டிருக்கும் போது, மேற்கூறியவாறு விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு, உரிய விசாரணைகளை மேற்கொண்டு, பிரதேச செயலாளரால் ‘காணவில்லை என்பதற்கான சான்றிதழை’ வெளியிடவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.

 

இதற்கிடையில், கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாகப் பல ஆவணங்கள் சேதமடைந்துள்ளதாக தேசிய சுவடிகூடம் (National Archives) தெரிவிக்கிறது.

 

கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்க குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin