மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..!
07.12.2025
இலங்கையில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடைந்தன.
மியான்மார் விமானப்படையின் Y-8 வகை விமானம் நிவாரணப் பொருட்களுடன் காட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இறங்கியது.
இந்த விமானத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் அவசர கால நிவாரண உபகரணங்கள் அடங்கும்.
இந்த நிவாரணப் பொருட்களை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வில் மியான்மருக்கான இலங்கைத் தூதர் திருமதி மார்லர் தான் ஹ்தைக், மியான்மர் வெளியுறவு அமைச்சகத்தின் பணிப்பாளர் ஜெனரல் சாவ் பியோ வின், மியான்மர் அரசாங்க பிரதிநிதிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை சார்பில் விமானப்படையின் திட்டமிடல் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் தேசப்ரிய சில்வா மற்றும் பல விமானப்படை உயர் அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்று நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொண்டனர்.
இது டித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச மட்டத்தில் கிடைக்கும் ஆதரவின் மேலும் ஒரு முக்கிய பங்களிப்பாகும்.

