நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ

நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..!
சஜித் பிரேமதாஸ

நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் நேற்று (06) அவர் இதனை தெரிவித்தார்.

இந்நேரத்தில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் மற்றும் உதவிகளை அதிகபட்சமாக அவர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அறிவிப்புச் செய்த இந்த நிவாரணங்கள் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை கள விஜயங்களின் போது அறிய முடிகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், திட்டமிட்டபடி உதவி பெற வேண்டியவர்களுக்கு அந்த உதவி போய் சேராத நிலை காணப்படுகின்றன.

எனவே அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், உதவி வழங்கப்படுவதாக விளம்பரம் செய்வது போல் அந்த உதவி உண்மையில் மக்களைச் போய்ச்சேர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் ஆபத்தான வானிலை நிலைமை உருவாகி வருவதாக கடந்த 11 ஆம் திகதி முதல் அறிவிப்புச் செய்யப்பட்டு வந்துள்ளன.

அதனை மறுக்க முடியாது. காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின்னர் அது புயலாக உருவெடுக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கும் போது, ​​அதனைக் கருத்தில் கொண்டு இடர் முகாமைத்துவ நிலையம் முன்னாயத்த பணிகளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

மக்கள் மீது ஏற்படும் பாதிப்புக்களையும், அழுத்தங்களையும் குறைத்திருக்க முடியும். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் முடிந்திருக்கும்.

எந்தவொரு பேரிடருக்கும் பின்னும் அரசியல்வாதிகள் அதனைப் பொறுப்பேற்க வேண்டும். இக்கட்டான காலங்களில் ஓடி ஒழியாமல் யதார்த்தத்துக்கு முகம் கொடுக்க வேண்டும்.

பொறுப்பை அதிகாரிகள் மீது சுமத்தாமல் இருப்பதும் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாகிய கொள்கை வகுப்பாளர்களின் பொறுப்பாகும்.

அதேபோல், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் மிகவும் தாமதமாகச் செய்து வருகிறது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசாங்கம் தற்போது குறைநிரப்பு பிரேரணையொன்றை சமர்ப்பித்துள்ளது.

நாம் ஏலவே இதனைச் சொன்னோம். நாடு முகம்கொடுத்திருக்கும் நிலைமைகளை எடுத்துக்காட்டி IMF உடன் பேசுமாறு நாம் பல முறை கோரிக்கை விடுத்து வந்தோம்.

நாம் கூறி வந்த ஒவ்வோரு சந்தர்ப்பங்களிலும் அதனைப் புறக்கணித்து விட்டு, இப்போது அரசாங்கம் IMF உடன் பேச்சை ஆரம்பித்துள்ளது.

நிபந்தனை தளர்த்திக் கொள்வது எவ்வாறு என்று பேச ஆரம்பித்துள்ளது. இதனைத் தான் நாம் ஏலவே சொன்னோம்.

நிலைமைகளை கையாளும் விடயத்தில் அரசாங்கம் இன்னும் செயற் திறனோடு நடந்து கொள்ள வேண்டும். மக்கள் பக்கம் நின்று, நாடு குறித்த சரியான நிலைப்பாட்டை அறிந்து அரசாளுகைக்கு நாம் சரியானதையே சொன்னோம்.

IMF உடன் பேச்சு நடத்தி நிபந்தனைகளை தளர்த்தி மக்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அரசாங்கத்தை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்களே முக்கியம். யார் தடையாக இருந்தாலும், எந்த வரம்புகளையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கு உதவ எதிர்க்கட்சி பாடுபடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin