மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய 9 லொறிகள்..!

மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய 9 லொறிகள்..!

மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் இன்று (07.11.2025) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

அரச அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பங்களிப்புடன் சேர்க்கப்பட்ட 2ம் கட்ட நிவாரணப்பணியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் புதிய மாவட்ட செயலகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மழை, வெள்ளம், மண்சரிவு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் ஞாயிற்றுக் கிழமை கொண்டு செல்லதற்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், மாவட்ட செயலகத்தின் மேற்கொண்டுள்ள நிவாரணப்பணியின் இரண்டாம் கட்டமே மலையக மக்களுக்கான நிவாரணப் பணியாக இடம்பெற்றுள்ளது.

இதற்கான நிவாரணப் பொருட்களை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள், வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டத்தில் செயற்படும் பொது அமைப்புக்களின் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மக்களுக்குத் தேவையான தண்ணீர் போத்தல்கள், உலர் உணவு வகைகளான அரிசி, கோதுமை மா, நூடில்ஸ், பிஸ்கட், டின்மீன்கள், பால்மா உட்பட சிறுவர்களுக்கான உணவு வகைகள், பம்பஸ் மற்றும் பெண்களுக்கான சுகாதார சுத்திகரிப்புப் பொருட்கள், உடைகள் போன்றவற்றுடன் கற்றல் உபகரணங்கள், பாடக்குறிப்புகள் போன்றவை சேகரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்நிவாரணப் பொருட்களை மலையகத்திற்கு கொண்டு செல்வதற்காக போக்குவரத்து வசதிகளை சில வர்த்தகர்கள் தாமாகவே முன்வந்து வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin