நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது இதில் நுவரெலியா கந்தப்பளை பகுதிகளில் விவசாய தோட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் முற்றாக சேதமடைந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வருந்துகின்றனர்.
மேலும், அறுவடை காலங்களில் தொழிலாளர்களும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். விவசாயத்தை சார்ந்துள்ள பல்வேறு தொழில்களும் தற்போது வரை நலிவடைந்து வருகிறது.
நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் மரக்கறிச் செய்கை நிலங்களில் வெள்ள நீர் உட்பிரவேசித்தது. அதன் விளைவாக மலைநாட்டு மரக்கறி பயிர்ச் செய்கைகளும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன இதில் கரட்,லீக்ஸ்,கோவா மற்றும் உருளைக்கிழங்கு அவற்றின் ஏராளமாக அழிவடைந்துள்ளது.
குறிப்பாக நுவரெலியா கந்தபளை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறி நீரில் மூழ்கி அழுகிவிடுகின்றன அல்லது மண்ணில் புதைந்துவிடுகின்றன அத்துடன் வெள்ளநீரால் பல்வேறு பூச்சிகள் தாக்குதலால் மரக்கறி வகைகள் பாதுகாக்க முடியாத நிலையில் பல்வேறு நோய்களால் பாதிப்படைந்து வருகிறது இது பயிர்கள் சேதமடையவும், விளைச்சல் குறைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படவும் காரணமாகிறது.
வெள்ளப் பெருக்கின் போது ஆற்று மணலும் சேறு கலந்த மழைநீர் விவசாய நிலத்தில் பாய்கிறது. வெள்ளம் வடிந்த பிறகு நீர் காய்ந்தாலும், மணலும், சேறும் சகதியும் அப்படியே நிலத்தில் தங்கிவிடுகிறது இதனால் விவசாய நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு உருமாறி பாலைவனம் போல் காட்சி அளிக்கின்றது .
மேலும் வேகமாக வரும் வெள்ள நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு மண் வளம் பாதிக்கப்படுகிறது இதனால் நிலமும் சேதப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கந்தபளை போன்ற பகுதிகளில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், மழைநீரை எடுத்துச்செல்லும் கால்வாய்கள் முறையாக புனரமைக்கப்பட்டு பராமரிக்கப்படாததன் காரணமாகவும் , நீர்ப்பரப்புப் பகுதிகளில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்பாலும், ஆறுகளை சரிவர ஆழப்படுத்திச் செம்மை செய்யாத காரணத்தாலும், அவற்றின் கொள்ளளவு குறைந்து, ஒரு பெருமழைக்குக்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டு இந்த விவசாய நிலங்களுக்கு அழிவு எற்பட்டு மூழ்குவதற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் உதவிகளை வழங்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும்.


