இலங்கையின் அனர்த்த மீட்சிக்கு ஜப்பானின் கூடுதல் ஆதரவை கோரிய எதிர்க்கட்சித் தலைவர்
இலங்கையின் மோசமடைந்து வரும் அனர்த்த நிலை மற்றும் நிவாரணத் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று ஜப்பானிய தூதுவர் அகியோ இஸோமாட்டா அவர்களைச் சந்தித்தார்.
அவசர கால அணிகளை அனுப்பியதற்காக ஜப்பானுக்கு நன்றி தெரிவித்த பிரேமதாச, சேதமடைந்த வீதிகள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட புகையிரத வலையமைப்பைச் சீரமைக்க தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் பணியாளர் ஆதரவு உள்ளிட்ட மேலதிக உதவிகளை வழங்குமாறும் கோரினார்.
பேரழிவின் அளவு, உள்கட்டமைப்பு சரிவு, வாழ்வாதாரங்களின் அழிவு, பாரிய இடப்பெயர்வு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பற்றாக்குறை குறித்து அவர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
பல முக்கிய மருத்துவமனைகளில் இன்னும் நீர் வசதி இல்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சாத்தியமான நோய் பரவலைத் தடுக்க அவசர மனிதாபிமான ஆதரவை வழங்குமாறு வலியுறுத்தினார்.
அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்ட சமூகங்களை விரைவாகவும் நியாயமாகவும் சென்றடைவதை உறுதி செய்ய, வெளிப்படையான மற்றும் அரசியல்மயப்படுத்தப்படாத வழிமுறைகளின் அவசியம் குறித்தும் பிரேமதாச வலியுறுத்தினார்.

