புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துங்கள்..!

புதிய வாகனங்களுக்கான நிதியை அனர்த்த நிவாரணத்திற்கு பயன்படுத்துங்கள்..!

வரவு செலவுத் திட்டத்தில் 1,775 புதிய கெப் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 12,500 மில்லியன் ரூபாவை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப் பயன்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘டித்வா’ சூறாவளிப் புயலால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக நேற்று (29) கடுவெல பிரதேசத்தில் மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கடுவெல கொத்தலாவல கல்லூரி, சங்கபிட்டித விகாரை, கடுவெல ஹேவாகம அபிநவராம விகாரை, கொரத்தோட்டை, நவகமுவ ஸ்ரீ அசோகராமய மற்றும் போமிரிய கனிஷ்ட வித்தியாலயம் உள்ளிட்ட பல இடைத்தங்கல் முகாம்களுக்கு அவர் விஜயம் செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

 

நாடு பாரிய அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் உயிர்களையும், உடமைகளையும், வீடுகளையும் இழந்துள்ளனர். எனவே, புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்வதை விட, ஒதுக்கப்பட்ட அந்த 12,500 மில்லியன் ரூபாவை மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக நிதியை மாற்றியமைக்க வரவுசெலவுத் திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரவோ அல்லது குறைநிரப்பு பிரேரணையைக் கொண்டுவரவோ அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவை வழங்கும்.

 

அனர்த்த நிவாரணத்திற்காக சர்வதேச ஆதரவைத் திரட்ட மாநாடொன்றைக் கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு கூட்டினால், நாட்டுக்குத் தேவையான நிதியைத் திரட்ட எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

 

இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடுகளை மறந்து, மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

 

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் இந்த நிதியைப் பயன்படுத்துமாறு அவர் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்தார்.

Recommended For You

About the Author: admin