‘அருண’ ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம்..!

‘அருண’ ஆசிரியரை சிஐடிக்கு அழைத்தமைக்கு நாமல் கண்டனம்..!

‘அருண’ பத்திரிகையின் தலைமை ஆசிரியர் மஹிந்த இலேபெருமவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தமையானது, ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையும் அடக்குமுறையும் ஆகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறான ஊடக அடக்குமுறையைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதாகக் கூறும் ஒரு அரசியல் இயக்கம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்த அல்லது அடக்க முயற்சிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் அறிக்கைகளைப் பெறுவதற்கு கிராம உத்தியோகத்தர் சான்றிதழுக்கு மேலதிகமாக, ‘மக்கள் பாதுகாப்புக் குழுவின்’ தலைவரின் சான்றிதழும் அவசியம் எனக் குறிப்பிடும் செய்தியொன்றை மஹிந்த இலேபெருமவை ஆசிரியராகக் கொண்ட ‘அருண’ பத்திரிகையில் வெளியிட்டமைக்காகவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்களின்போது முதலில் குறித்த ஆசிரியர் பற்றி பத்திரிகை பேரவையிடம் முறைப்பாடு செய்திருக்க வேண்டும் அல்லது பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிற்கு அழைத்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறான முறைமையின்றி இவ்வாறு அத்துமீறி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைப்பது அரசாங்கத்தின் அடக்குமுறைக்குச் சிறந்த சான்று என்றும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, தான் ஊடக அடக்குமுறையைக் கண்டிப்பதாகவும், அரசாங்கத்தின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைப் பயன்படுத்துவது மிகவும் வருந்தத்தக்கது என்றும் நாமல் ராஜபக்ஷ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin