மடகஸ்கரின் ஜனாதிபதி மாளிகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள பிரமாண்ட, ‘எமரால்ட் ‘ எனப்படும் பச்சை நிற மரகத கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் புதிய இராணுவ ஆட்சியின் ஜனாதிபதி மைக்கேல் ராண்ட்ரியரினா இதனை தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகஸ்கரில், ஊழல், அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், சமீபத்தில் இளம் தலைமுறையினர், அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இது மிகப் பெரும் போராட்டமாக நாடு முழுதும் பரவியது. இதையடுத்து, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி ராஜோலினா, இராணுவத்தினருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ எடையுள்ள மரகத கல், தேசிய பொக்கிஷத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச திறைசேரி கிட்டத்தட்ட காலியாகியுள்ள நிலையில், சர்வதேச நிதியுதவியைப் பெறவும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவும் புதிய நிர்வாகம் செயற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரச திறைசேரியை நிரப்ப, ஜனாதிபதி மாளிகையில் கைப்பற்றப்பட்ட மரகத கல்லை ஏலத்திற்கு விடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

