வெல்லாவெளியில் பதற்றம்: தொல்லியல் திணைக்கள அதிகாரிகளைத் துரத்தியடித்த மக்கள்!
மட்டக்களப்பு, வெல்லாவெளி – கண்ணபுரம் பகுதியில் தொல்லியல் பிரதேசமாக அடையாளப்படுத்தி பெயர்ப்பலகை நட வந்த அதிகாரிகளை, பிரதேச சபை தவிசாளர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தடுத்து நிறுத்தித் திருப்பியனுப்பிய சம்பவம் இன்று (21) இடம்பெற்றுள்ளது.
வெல்லாவெளி பிரதேச சபைக்குட்பட்ட 35ஆம் கிராமம் கண்ணபுரம் வீதியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பெயர்ப்பலகை ஒன்றை நடுவதற்காக வருகை தந்திருந்தனர். இதையறிந்த போரதீவுப் பற்றுப் பிரதேச சபை தவிசாளர் வி.மதிமேனன் தலைமையிலான குழுவினர் மற்றும் பொதுமக்கள் உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
தவிசாளர் கடும் சாடல்
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் மதிமேனன், “எமது பிரதேசத்தில் வேத்துச்சேனை, கண்ணபுரம், விவேகானந்தபுரம் உள்ளிட்ட 34 இடங்கள் தொல்லியல் பிரதேசங்களாக இருப்பதாகக் கூறி இவர்கள் பதாகை நட வந்துள்ளனர். வடகிழக்கில் தொல்லியல் மற்றும் வனவளத் திணைக்களங்கள் தமிழர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முன்னைய ஆட்சிகளைப் போல பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகளையே முன்னெடுக்கிறது,” எனக் கடுமையாகக் குற்றம் சுமத்தினார்.
மேலும், பிரதேச சபைக்குச் சொந்தமான வீதிகளில் பலகைகளை நடுவதாயின் சபையின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும், பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயற்படக் கூடாது எனவும் அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


