நெடுந்தீவு தொடர்பான சூழல் சுற்றுலா ஆய்வு நூல் வெளியீடு..!
கியூமெடிக்கா நிறுவனத்தினால் நெடுந்தீவுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அதன் விபரங்களை உள்ளடக்கிய நூல் வெளியீடு கியூமெடிக்கா சர்வதேச பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. ஜொகானஸ் பீட்டர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) பி.ப. 03.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், கியூமெடிக்கா பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சசின்து டிமெல் மற்றும் மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் திரு. ரி. சர்வநாதன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இந் நிகழ்வில் கியூமெடிக்கா நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ரி. ஜி. பிரிதிவிராஜ் அவர்களினால் வரவேற்புரையாற்றப்பட்டது.
இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும் சேதப்படுத்தாமல் பேணவும், பறவைகள் விலங்குகள் பாதுகாக்கவும், உள்ளூர் மக்களின் நலனை உயர்த்தவும், சுற்றுலா பயணிகளுக்கு பொறுப்பான மற்றும் நிலைத்த பயண அனுபவத்தை வழங்கவும் அடிப்படையாகக் கொண்டு நெடுந்தீவு சூழல் சுற்றுலா (இக்கோ டூரிசம் – Delft Eco Tourism) பல ஆய்வுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நூலாகும். இந் நூலில் நெடுந்தீவில் உள்ள மருத்துவ குணம் கொண்ட 170 தாவரங்கள், 107 தாவர வகைகள், வெளிநாட்டு களிலிருந்து வருகை தரும் பறவைகள் மற்றும் சுற்றுலா இடங்கள் என்பவற்றை உள்ளடக்கிய வகையில் வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் தயாரிக்கப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் அவர்கள், நெடுந்தீவில் விரிவுரையாளர் தலைமையிலான குழுவினர் தங்கியிருந்து அங்குள்ள விடயங்களை ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட நூலாகும் எனவும், விசேடமாக மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை இனங்கண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், தனியே சுற்றுலா என்று பார்க்காமல் மருந்துவ குணம் கொண்ட செடிகளை பேணி வலுவூட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும், வருமானத்தினை அதிகரிக்க உத்திகளை உள்ளடக்கியதால் சுற்றுலாவினை மேம்படுத்த சிறப்பாக இருக்கும் எனவும், இவ் நூலினை இணையவழி ஊடாகவும் வெளியிட்டு சுற்றுலாத்துறையினை அதிகரிக்க முடியும் எனவும் மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், கியூமெடிக்கா உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.


