தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு..!
தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் தலைவர் திரு. டயா லங்காபுர அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (19.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் திரு. கே. டி. எஸ். ருவன்சந்திரா, ஆணையாளர்களான சட்டத்தரணி திருமதி கிசாலி பின்ரோ ஜெயவர்த்தன, சட்டத்தரணி திரு.ஜெகத் லியன ஆராட்சி, திரு. மொகமட் நஹியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச் செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள், செயலர்வுக்கு வருகைதந்த ஆணைக்குழுவின் தலைவர், பணிப்பாளர் நாயகம் மற்றும் பணிப்பாளர், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு மற்றும் கடப்பாடுகள்இருப்பதாகவும், பொதுமக்களுக்கு தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகமுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இன்றைய செயலமர்வானது தகவல் உத்தியோகத்தர்களுக்கு மேலும் வலுப்படுத்தும் செயற்பாடாக அமையவுள்ளதாகவும் எனத் தெரிவித்தார்.
இச் செயலமர்வில் தலைமையுரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் அவர்கள், இன்றைய செயலமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தகவல் உரிமைகள் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பொது மக்களால் கோரப்படும் தகவல்களை வழங்குவது கடப்பாடாகும் எனவும், தகவல் வழங்கப்படாத நிலையில் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு முன்வைக்கப்படுவதாகவும், தினமும் 30 தொடக்கம் 35 வரையான முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படுவதாகவும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற தூர இடங்கள் உள்ள முறைப்பாட்டாளர்களின் விண்ணப்பங்கள் நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் அவர்களுடன் மேலதிக பரிசீலனைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், பொது மக்களின் முறைப்பாட்டில் அனேகமானவை தனிப்பட்ட விடயங்களே முன்வைக்கப்படுவதாகவும், பொதுவான விடயங்கள் குறைவாகவே உள்ளன எனவும், தகவல் உத்தியோகத்தர்கள் உரிய தகவல்களை வழங்கினால் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வருவது குறைவாக இருக்கும் எனத் தெரிவித்து, இன்றைய செயலமர்வில் வழங்கும் மேலதிக அறிவுறுத்தல்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.
இச் செயலமர்வில் தகவல் உத்தியோகத்தர்களான பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சபையின் திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தகவல் விடயப் பரப்பு உத்தியோகத்தர்களான மாவட்டச் செயலக, பிரதேச செயலக, வடமாகாண பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


