மட்டக்களப்பில் தொழில் கல்வியை நிறைவு செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு..!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் கீழ் இயங்கி வரும் தொழில் வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டு வரும் கணனி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15.11.2025) மட்டக்களப்பு கிரீன் வீதியில் அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவனின் வழிகாட்டலில் இயங்கி வரும் இத்தொழில் பயிற்சி நிலையத்தில், கணினி பயிற்சி மற்றும் மென் திறன் பயிற்சிகளை பூர்த்தி செய்த நான்காம் கட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை, மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய ஜே. எஸ். அருள்ராஜ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இம்மானவர்களுக்கான கணினி பயிற்சிகளை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரும் இப்பயிற்சி நெறியின் இணைப்பாளருமாகிய ஏ.ஆர.எம். பாஸில் வழங்கி வைத்ததுடன், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் தலைமைத்துவ பயிற்சிகளை மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தரான ஏ. கருணாகரன் வழங்கி வைத்துள்ளார்.
தொழில் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி கற்கை நெறிகளை தொடர முடியாத மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விசேட பயிற்சி நிலையத்தில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து வெளியாகி உள்ளனர்.
இம்முறை இடம் பெற்ற நான்காம் கட்ட மாணவர்களில் 32 மாணவர்கள் கற்கை நெறிகளை பூர்த்தி செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வின்போது உதவி மாவட்ட செயலாளர் பிரிவின் பதவி நிலை உதவியாளர் கே.எம். றிழா, மனிதவள அபிவிருத்தி பிரிவின் இணைப்பாளர் டபிள்யூ. மைகல்கொலின், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ. திருவானந்தராசா, மற்றும் கற்கை நெறியினைப் பூர்திசெய்த மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

