இலங்கை – பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் பிற்போடல்..!

இலங்கை – பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் பிற்போடல்..!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்பட்டுள்ளன.

இதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று (13) இடம்பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவிருந்த 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதியும் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை குழாமின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் பணிக்குழாமினர் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்தனர்.

இதனால் இன்று நடைபெறவிருந்த போட்டியை திட்டமிட்டவாறு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதனை அடுத்து ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகமும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

அதன்பின்னர் இலங்கை அணி வீரர்கள் மற்றும் பணிக்குழாமின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த தொடரை முழுமையாக நிறைவு செய்யுமாறு இலங்கை வீரர்கள் மற்றும் பணிக்குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்திருந்தது.

அதேநேரம் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் இந்த பணிப்புரையை மீறும் வீரர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையிலேயே குறித்தப் போட்டிகள் ஒருநாள் பிற்போடப்பட்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin