தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்திற்கு புதிய ஆலோசனைக் குழுவில் தமிழ், முஸ்லிம் எவருமில்லை !!
புத்த சாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனவி, தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்துக்கான புதிய ஆலோசனைக் குழுவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குழுவானது, பௌத்த துறவிகள் மற்றும் பொது மக்கள் ஆகிய இரு தரப்பினரையும் உள்ளடக்கிய 19 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.
ஆனால் தமிழ், முஸ்லிம் தரப்பிலிருந்து எவரும் பெயரிடப்படவில்லை.
பொலன்னறுவை சொளொஸ்மஸ்தான ராஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதியும், மஹா விகாரவம்ஷிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி மஹா விகாரைப் பிரிவின் அனுநாயக்க தேரருமான வண. வெண்டருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி நாயக்க தேரர் அவர்கள் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்தக் குழுவின் பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.
கடந்த காலங்களிலும் பௌத்த, சிங்கள அடிப்படையைக் கொண்ட தொல்பொருள் திணைக்களத்தினாலேயே தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் காரணமாக பாரம்பரிய தமிழ்ப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்ட, தமிழ், சைவ ஆலயங்கள் அமைந்திருந்த இடங்களும் அம்பாறை மாவட்டம் போன்ற தமிழ், முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்கள் பௌத்த விகாரைகள் இருந்த இடங்களாக அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.



