மலையக வீட்டுப் பிரச்சினையை தீர்க்க 150,000 வீடுகள் கட்டப்படவேண்டும்..!

மலையக வீட்டுப் பிரச்சினையை தீர்க்க 150,000 வீடுகள் கட்டப்படவேண்டும்..!

நுவரெலியா மாவட்டத்தில் குடியிருப்புப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமாயின் 150,000 வீடுகள் கட்டப்பட வேண்டும். அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்கான கட்டம் கட்டமான நடவடிக்கைகளை எடுப்போம். வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

 

 

நேற்று (03) கினிகத்தேன கெனில்வத்த பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இத்தாலி நாட்டு நிதியுதவியில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீடுகளை மக்கள் பாவனைக்கு கையளித்துவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி,

 

 

 

இந்த வேலைத்திட்டத்தை இத்தாலி நாட்டின் ஒத்துழைப்போடும் தேசிய மக்கள் சக்தியும் இணைந்து 03 மில்லியன் செலவில் முழுமையாக இந்த வீடுகளைப் புனரமைப்புச் செய்து மக்கள் பாவனைக்குக் கையளித்திருக்கின்றோம். இலங்கை நாட்டில் உள்ள மக்கள் நாட்டினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல நாடு முழுவதும் உழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நாட்டு மக்களின் பணத்தை வீண் விரயம் செய்யாத, ஊழல் வாதிகள் இல்லாத ஒரு அரசாங்கத்தை இனங்கண்ட பிறகு இது போன்ற உதவிகளை வெளிநாட்டவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதற்கு நாட்டில் உருவாகியுள்ள எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துக்கொண்டு இது போன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அரசாங்கத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருவதோடு, இரண்டாம் கட்டமாக இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பத்தாயிரம் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஒரு பிரச்சினை காணப்படுகிறது. அதற்கான காணியை வழங்குவதில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு பிரச்சினை காணப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தில் தோட்டத்தில் தொழில் புரிகின்ற நபருக்கு மாத்திரம் வீடுகளை வழங்க முடியும். அதேபோல் தோட்டத்தில் குறைந்தபட்சம் 05 வருடங்கள் தொழில் புரிந்திருந்தால் மாத்திரம் அவருக்கான வீட்டினை வழங்கக் கூடிய உரிமை உள்ளது. வரலாற்றில் 5 வருடம், 10 வருடங்களாக அமைத்துக்கொள்ள முடியாத வீடமைப்புத் திட்டத்தை நாங்கள் ஒரு வருடத்தில் முன்னெடுத்து வருகிறோம். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் கடந்த முறையைவிட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதனை மக்கள் பொறுத்திருந்து பார்ப்பார்கள் எனக் குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: admin