14 நாளாக தொடரும் கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டம்..!
திருகோணமலை புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர் சம்பளம்கோரி தொடர்ச்சியாக 14 நாளாகவும் இன்று (27) நிறுவனத்தின் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து யூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் Pடு-1-2016 சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்ட குறித்த ஊழியர்களே 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து நிறுவனத்தின் முன்பாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். குறித்த காலப்பகுதியில் நியமனம் வழங்கப்பட்ட 83 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கிய நாளில் இருந்து இன்றுவரை 15 மாதங்களுக்கு மேலாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் அதனை கோரி தொடர்ச்சியாக 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும் இதுவரை எவரும் வந்து தம்முடன் கதைக்கவில்லை எனவும் கவலை வெளியிடுகின்றனர்.

