பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம்
சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம்..!
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார அறிவைப் பெறுவதன் மூலம்
சிறந்த குடும்பக் கட்டமைப்பை உருவாக்கலாம் என பூநகரிப் பிரதேச
மேற்பார்வைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பூநகரியிலுள்ள மகளிர் அமைப்பைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார குடும்பதிட்டமிடலும் எனும் தலைப்பில் பூநகரி பிதேச செயலகத்தில் இடம்பெற்ற கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இளையவர்கள், வளர்ந்தவர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான தெளிவானதும் சரியானதுமான அறிவைப் பெறுவதன் மூலம் சிறந்த குடும்பக்கட்டமைப்பை உருவாக்கலாம்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் குறித்த தெளிவான புரிதல் இன்மையால் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பாலியல் உறவுத்திருப்தி இன்மை, மன முரண்பாடுகள் புரிந்துணர்வின்மை என்பன உருவாகி அது மணமுறிவுவரை செல்கின்றது.
கணவனும் மனைவியும் உறவுநிலையில் திருப்தியாக இருக்கும் போதே குடும்பக்கட்டமைப்பு மேம்பட்டு குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழல்கிடைக்கும்.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் தொடர்பான பல மூட நம்பிக்கைகளும் குடும்ப நன்நிலையைச் சிதைக்கின்றன.
குடும்பத்தின் அனைத்து பொறுப்புக்களிலும் கணவனும் மனைவியும் இணைந்து ஈடுபடவும், ஒருவருக்கொருவர் தகுந்த துணையாக ஆயுள் முழுவதும் நீடிக்கவும் இந்த அறிவும் புரிதலும் இன்றியமையாதவை.
குடும்பத்திட்டமிடல் என்பது கருத்தடை முறைகளைப் பயன்படுத்தி குழந்தைகளைப் பெறுவதை நிறுத்துவதல்ல. மாறாக குந்தைகளின் வளர்ச்சி விருத்தியை முழுமையாகக் கவனிப்தற்காக இரண்டு குழந்கைளுக்கிடையில் இரண்டு வயது இடைவெளியைப் பேணவும், கணவனும் மனைவியும் இணைந்து தீர்மானித்து தமக்குத்தேவையான குழந்தைகளைத் திட்டமிட்டு பெற்றுக்கொள்வதற்குமே பயன்படுத்தப்பட வேண்டும்.
உங்களுக்குப் பொருத்தமான கருத்தடைப் பாவனை முறையை வைத்தியரின் ஆலோசனையுடன் நீங்களே தெரிவு செய்யமுடியும்.
கருத்தடை சாதனங்கள், மருந்துகளைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை அறியவும் அதை பொருத்தமான முறையில் பயன்படுத்தவும் உங்களுக்கு உரிமையுண்டு.
தற்போது இலங்கையின் பிறப்புவீதம் குறைந்துள்ளதோடு தமிழர்களின் பிறப்புவீதம் மிகவும் குறைந்துள்ளது. இவை குறித்தும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
குழந்தைகள் துஷ்பிரயோகத்துக்குள்ளாவதைத் தடுக்க அவர்களுக்கு நல்ல தொடுகை, கெட்ட தொடுகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பதின்ம வயதுத் திருமணங்களையும் இரத்த உறவினர்களுக்கிடையிலான திருமணங்களையும் தவிர்க்கவேண்டும்.
எனவே தெளிவான முறையில் பாலியல் கல்வியை எவ்லோரும் பெறுவது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாக அமையும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

