கிளி. பளை பிரதேச செயலர் பிரிவில் மாதுளைச் செய்கையின் அறுவடை விழா..!
கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலர் பிரிவில், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் ரெட் ஏஞ்ஜல் அக்ரோ லிமிட்டட் விவசாய கம்பனி உருவாக்கப்பட்டு அதன் கீழ் மேற்கொள்ளப்பட்ட மாதுளைச் செய்கையின் அறுவடை விழா இன்று (17.10.2025) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 150 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 420 மாதுளம் கன்றுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன. பாரம்பரிய முறையில்லல்லாது நவீன முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதலாவது அறுவடையே இன்று நடைபெற்றது. ஒவ்வொரு மரத்திலிருந்தும் ஆரம்பத்தில் 10 கிலோ மாதுளை அறுவடை எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் : இலங்கையில் வளம் கூடியதும், வறுமை கூடியதுமான மாகாணம் எமது மாகாணம்தான். வளங்களை உரிய முறையில் பயன்படுத்தாமையால் வறுமையிலும் முன்னிலையில் இருக்கின்றோம்.
விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கவேண்டுமாக இருந்தால் கொள்வனவில் போட்டித்தன்மை தேவை. அவ்வாறான போட்டித்தன்மையான கொள்வனவை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக விவசாயமும் வருமானம் கூடிய துறையாக மாறும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
விவசாயிகள் நவீன முறையிலான பயிர்ச்செய்கை முறைமைக்கு மாறவேண்டும். அதன் ஊடாகவே வர்த்தக நோக்கிலான அறுவடையையும் பெற்றுக் கொள்ள முடியும். விவசாயிகளின் வருவாயும் கூடும்.
இந்தத் திட்டம் வெற்றியளிக்காது என்று விலகிச் சென்ற விவசாயிகள், உங்களின் செயற்பாடுகளைப் பார்த்து தாம் ஏன் விலகிச் சென்றோம் என்று நினைக்கவேண்டும். இன்னும் பலரை இணைத்து இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடத்திச் செல்லவேண்டும், என்றார் ஆளுநர்.
இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பளை பிரதேச செயலாளர், பிரதம செயலக உதவிச் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், விவசாய நவீன மயமாக்கல் திட்டத்தின் உதவிப் பணிப்பாளர், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


