ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து
விமானம் பத்திரமாக தரையிறங்கியது;
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7, 2025) தரையிறங்கிய ஏர் இந்தியா கொழும்பு-சென்னை விமானத்தில் பறவை மோதியதால், அந்த விமானத்தின் மறுபயணச் சேவை ரத்து செய்யப்பட்டது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் 158 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் பத்திரமாக தரையிறங்கியதையடுத்து, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.
விமானம் தரையிறங்கிய பிறகே பறவை மோதல் நிகழ்வு கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து, விமானம் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டு (grounded), ஏர் இந்தியா பொறியாளர்களால் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாகவே விமானத்தின் மறுபயணச் சேவையை விமான அதிகாரிகள் ரத்து செய்தனர்.
கொழும்புக்குத் திரும்ப வேண்டிய 137 பயணிகளுக்காக விமான நிறுவனம் வேறு ஒரு விமானத்தை ஏற்பாடு செய்தது. அதன்பின்னர் அவர்கள் கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

