“ராஜபக்சக்கு தூக்குத் தண்டனையே பொருத்தமானது!” – சரத் பொன்சேகா ஆவேசம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த சரத் பொன்சேகா. ராஜபக்சவை ஊழல், துரோகம் மற்றும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். அத்துடன், அரசியலமைப்பின்படி ராஜபக்சவுக்கு “தூக்குத்தண்டனையே பொருத்தமானது” என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்தார்.
விஜேராமவில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைப்பதில் தாமதம் குறித்து ராஜபக்சவின் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்த பொன்சேகா, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பெறுமதி மிக்க அரச சொத்துக்கள் சட்டவிரோதமாக தனிப்பட்ட இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
தனது தனிப்பட்ட பொருட்களை அகற்றுவதற்கு முன், அரச சொத்துகளின் சரக்குப் பட்டியலை நிறைவு செய்ய அரச துறைகள் காத்திருப்பதாக ராஜபக்ச தரப்பு கூறியதை பொன்சேகா கேலி செய்தார்.
”வீட்டை பழுதுபார்ப்பதற்காக 500 மில்லியன் ரூபாய் செலவழித்த மஹிந்த ராஜபக்ச, தனது சொந்த பணத்தில் வாங்கிய ஒரு தேங்காய்த் துருவியை கூட கொண்டு வருவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
“நான் நீதித்துறை அமைச்சராக இருந்திருந்தால், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து பெறுமதி மிக்க பொருட்களை விஜேராம இல்லத்திற்கு மாற்றியதற்காக ராஜபக்ஷவுக்கு எதிராக முதல் வழக்கை தாக்கல் செய்திருப்பேன். அவரை 24 மணி நேரத்தில் கைது செய்ய முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட பல குற்றச்சாட்டுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் தொடர்ந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்து பொதுமக்களை சுரண்டுவதாக பொன்சேகா குற்றம் சாட்டினார். அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர் கூறுகையில், “இந்த அரசாங்கம் எவ்வளவுதான் தங்கள் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பெருமை பேசினாலும், அவர்களால் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சரியாக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், அவர்கள் நாட்டைச் சீர்திருத்திவிட்டார்கள் என்று நாம் ஏற்றுக்கொள்ள முடியாது,” என்றார்.
போரின் இறுதி நாட்களை நினைவு கூர்ந்த பொன்சேகா, விடுதலைப் புலித் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல அனுமதிக்கும் நோக்கத்திலேயே ராஜபக்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார் என்று குற்றம் சாட்டினார்.
”போரின் இறுதி நாட்களில் அவர் ஏன் போர் நிறுத்தத்தை உத்தரவிட்டார் என்பதை மஹிந்த ராஜபக்ச விளக்க வேண்டும்,” என்று அவர் கேட்டார். “இது வேறு நாடாக இருந்திருந்தால், இந்தத் துரோகச் செயலுக்காக மஹிந்த ராஜபக்சவை காலில் தூக்கிக் கட்டி கொலை செய்திருப்பார்கள். நமது அரசியலமைப்பின்படி அவருக்குரிய தண்டனை தூக்கிலிடப்படுவதே ஆகும்” என்று அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மீது தனக்கு தனிப்பட்ட பகை எதுவும் இல்லை என்றாலும், ராஜபக்சவின் நாட்டிற்கு இழைத்த துரோகத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பொன்சேகா கூறினார். துறைமுகங்கள், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், போதைப்பொருள் மாஃபியா, ஆயுத இறக்குமதியாளர்கள், சுங்கத் துறை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஆகியவற்றில் இருந்து ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு ஊக்குவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் போர் வீரர்களுக்கு இழைக்கப்பட்ட நடத்தையையும் அவர் நினைவு கூர்ந்தார், “நாங்கள் போரில் ஈடுபட்டிருந்தாலும் பிரபாகரன் எங்கள் குடும்பங்களை தாக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. ஆனால் ராஜபக்சக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல,” என்று கூறியதுடன், தனது குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுமாறு அவர் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தார். “மஹிந்த ராஜபக்ஷ ஏன் நாட்டைக் காட்டிக் கொடுத்தார் என்பதைக் கண்டறிய உயர்மட்ட விசாரணை – ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு – கூட அமைக்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்திற்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளைப் பாராட்டிய பொன்சேகா, “ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், குற்றவாளிகளைப் பாதுகாக்காத அதன் நிலைப்பாட்டையும் நான் பாராட்டுகிறேன், ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது,” என்று கூறினார்.

