கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் உலக குடியிருப்பு தின நிகழ்வு..!
உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகிறது.
அந்தவகையில் உலக குடியிருப்பு தினத்தையொட்டி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ” சொந்தமான வீடு அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் உலக குடியிருப்பு தினம் இன்று(02.10.2025) அனுஸ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00மணிக்கு நடைபெற்றது.
இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் 33 பேரும் மற்றும் 15 இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்ட பயனாளிகள் 71 பேருமாக மொத்தமாக 104 வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கான பயனாளி தெரிவுச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் குறித்த தினத்தை நினைவுகூரும் வகையிலும், வீடுகளை அமைக்கும் போது இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிப்பதை தடுக்கும் செய்ற்பாட்டை வலியுறுத்தும் நோக்கில் குறித்த பயனாளிகளின் வீட்டு வளாகத்தில் நடுகை செய்வதற்கு நான்கு தென்னங் கன்றுக்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் D.L. டிபானி பிரியங்கா, கிளிநொச்சி மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனப்பவன், பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்பாளர், விடய உத்தியோகத்தர்கள், வீட்டுத்திட்ட பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


