சிறுவர் தினத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வு..!
சர்வதேச சிறுவர் தனத்தினை முன்னிட்டு போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் வழிகாட்டுதலின் கீழ் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாக்கத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
சர்வதேச சிறுவர் தினமானது இம்முறை “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” எனும் தொனிப் பொருளில் நாடளாவிய ரீதியில் சிறுவர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு மண்முனைமேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 15 பாடசாலைகளில் தலா 5 மாணவர்களை உள்ளடக்கியதான போதைப்பொருள் முற்தடுப்பு நிகழ்ச்சி திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட செயலக போதைப்பொருள் முற்தடுப்பு மாவட்ட இணைப்பாளர் ப.தினேஸ் , போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.ஜெகன், பிரதேச செயலக போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.நித்தியானந்தன், பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.சக்திநாயகம், தேசிய ஒருமைப்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.சிறிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


