செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ?

செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வு – செலவீன பாதீட்டு அங்கீகார அறிக்கை 13ஆம் திகதி தாக்கல் செய்யப்படும் ?

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கை எதிர்வரும் வாரங்களில் மன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 13ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற போது, பாதீட்டுக்கான அங்கீகார அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க அரச சட்டத்தரணி கால அவகாசம் கேட்டமையினால் , வழக்கினை எதிர்வரும் 13ஆம் திகதி எடுத்து கொள்ள நீதவான் தவணையிட்டார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளன.

கட்டம் கட்டமாக 54 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, இது வரையில் 240 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்ட நிலையில், அவற்றில் 239 என்புத்தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அந்நிலையில் புதைகுழிக்கு அருகில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படலாம் என ஸ்கான் அறிக்கை உள்ளிட்ட நிபுணத்துவ அறிக்கை ஊடாக சந்தேகிக்கப்படுவதால் , மேலும் 08 வார கால பகுதிக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்றிடம் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவம் விண்ணப்பம் செய்த நிலையில் , மன்று , அதற்கான செலவீனப்பதீட்டை மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தது.

அந்நிலையில் , கடந்த வழக்கு தவணையின் போது மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான பாதீட்டு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் , அதற்கான அங்கீகார அறிக்கை இன்றைய தினம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin