வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா : சுகாதார விதிகளை மீறிய 24 கடைகள் மீது வழக்கு!
வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடைபெற்ற புகழ்பெற்ற பட்டத் திருவிழாவின் போது, சுகாதார நடைமுறைகளை மீறிய உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த தைப்பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறையில் நடைபெற்ற பட்டத் திருவிழாவில், பொதுமக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட உணவு விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டன.
உணவு கையாளுபவர்கள் முறையான மருத்துவச் சான்றிதழ் இன்றி செயற்பட்டமை, முகச்சவரம் செய்யாமை மற்றும் போதிய தனிநபர் சுத்தம் பேணாமல் உணவுகளைக் கையாண்டமை. அனுமதிக்கப்பட்ட தரமான கொள்கலன்களைப் பயன்படுத்தாது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ரகங்களைப் பயன்படுத்தியமை , திண்மக் கழிவுகளைத் திறந்த வெளியில் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியமை போன்றன சுமத்தப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளாகும். .
இது தொடா்பில் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ப. தினேஸ் அவர்களால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (ஜனவரி 23, 2026) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 24 உரிமையாளர்களில் 19 பேர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகித் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மொத்தமாக 4 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேவேளை நீதிமன்றில் முன்னிலையாகாத ஏனைய 5 உரிமையாளர்களுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

