மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ மூஷிக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி பூசையின் ஏழாம் நாள் பூசை..!
நேற்று (29.09.2025) திங்கட்கிழமை நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் இடம்பெற்றுவரும் நவராத்திரி பூசை விசேட தீபாராதனையுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
நவராத்திரி விழாவானது ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதில் முதல் மூன்று நாட்களும் வீரத்தின் வடிவமான துர்க்கைக்கும், அடுத்துவரும் மூன்று நாட்கள் செல்வத்தின் அதிபதியான இலட்சுமிக்கும் இறுதி மூன்று நாட்கள் கல்வியின் வடிவமான சரஸ்வதிக்கும் விழா எடுத்து விரதமிருந்து வழிபடுவது வழக்கமாகும்.
ஒன்பது நாள் நிறைவுபெற்று பத்தாம் நாள் விஜயதசமியாகும், அன்றைய தினம் ஏடு தொடங்குதல் முதலான சுப காரியங்களை ஆரம்பிப்பது வழக்கம்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா தலைமையில் இடம்பெற்ற பூசை நிகழ்வில் கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு பொங்கலிட்டு, பிரசாதம் படைத்து விஷேட பூசை இடம்பெற்றதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களின் வழிகாட்டலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலக கட்டடத் தொகுதியின் வரவேற்பு பீடத்திற்கு அருகில் ஆன்மீக சொற்பொழிவு, நடன கலைஞர்களின் அழகிய நடனங்கள் உள்ளிட்ட அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றததுடன், இதன்போது கண்கவர் நடன நிகழ்வுகளை வழங்கிய நடன கலைஞர்கள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்ஜனி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக ஆலய பிரதம குரு ஆகியோரினால் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


