விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறுக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்..!
காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் (25.09.2025) களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு கிராமிய அபிவிருத்தி பணியகம் 75.63மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட 10ஏக்கர் பகுதியின் துப்பரவு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த பகுதியை பார்வையிட்டனர்.
தொடர்ந்து குறித்த திட்டத்திற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ள UNDP நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் டமிந்த சந்திரசேகரவுடன் தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
குறித்த விவசாய சமூக பண்ணையில் 20 பச்சை வீடுகளும், 10 வலை வேலித் துண்டங்களும் அமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்ட விவசாய நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படவுள்ளன.
குறித்த பகுதி விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பயிர்ச்செய்கை மேற்கொள்ள சந்தர்ப்பமளிக்கப்படும். தொடர்ந்து சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
குறித்த களவிஜயத்தில் குறித்த கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், UNDP நிறுவனத்தின் திட்ட பணிப்பாளர் டமிந்த சந்திரசேகர, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சி.கஜேந்திரன், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளரும் பதில் திட்டமிடல் பணிப்பாளருமான எஸ்.மோகனபவன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.கருணாநிதி, கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி.சோதிலட்சுமி, நீர்ப்பாசன பொறியியலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


