வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல்..!
வட கிழக்கு பருவமழை வீழ்ச்சிக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (25.09.2025) மு. ப. 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்திற்கு வருகை தந்த நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்களை வரவேற்றதுடன், பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் உள்ளூராட்சி சபைகள் ஒருங்கிணைந்து கடமையாற்றும் போது அது மக்களுக்கு வெற்றியளிக்கும் எனவும், அந்தவகையில் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இணைந்து செயற்படுவதே மக்களுக்கு நன்மையாகும் எனவும் தெரிவித்தார். மேலும், பருவமழை காலங்களில் உள்ளூராட்சி அமைப்புக்களுடன் பிரதேச சபைகள் இணைந்த வகையில் ஆற்ற வேண்டிய முன்னாயத்த வேலைகளை ஆராய்வதே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும், கடந்த ஆண்டு வெள்ள அனர்த்த நெருக்கடி ஏற்பட்டமைக்கு அத்துமீறிய – சட்டவிரோத கட்டடங்களும் காரணமாக அமைந்துள்ளதை அரசாங்க அதிபர் குறிப்பிட்டு, இக் கூட்டத்தில் ஆலோசனை முன்வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபரால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.தீவகப் பகுதிகளில் அனர்த்தம் தொடர்பாக கள விஜயத்துடன், முன்னாயத்த கூட்டங்களை நடாத்துமாறு தெரிவிக்கப்பட்டது.அந்தவகையில் நெந்தீவில் எதிர்வரும் 30 ஆம் திகதியும், வேலணையில் ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி காலையும், மாலை ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திலும், காரைநகர் பிரதேச செயலகத்தில் 02 ஆம் திகதியும் கூட்டங்களை நடாத்துவது எனவும் இக் கூட்டத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்டவர்களையும் தொடர்புடைய திணைக்களங்களையும் அழைத்து ஆராயுமாறு அரசாங்க அதிபர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
2.யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியோர கழிவுவாய்கால் துப்புரவு செய்யப்பட வேண்டுமென ஆராயப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
3.நல்லூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கந்தர்மடம் பகுதியில் கால்வாய்கள் சீரமைகப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி பிரதேச மட்ட பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
4.சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லுண்டாய் வெளிப்பகுதியில் காணப்படும் திண்மக்கழிவு பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இது தொடர்பாக அனைவரும் பொறுப்புணர்வுடன் இணைந்து செயல்பட அறுவுறுத்தப்பட்டது.
5 சங்கானை பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் உவர்நீர்த்தடுப்பு செயற்பாடு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன்,
ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி பிரதேச மட்ட பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
6.கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கரவெட்டி புறா பொறுக்கி எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக உள்ள வடிகால் வாய்க்கால் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பிற்கு காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டதால் அனர்த்த நிலைமையினை கருத்தில் கொண்டு தீர்ப்பை பெற்றுக்கொள்ள பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டதுடன், ஒக்டோபர் மாதம் 09 ஆம் திகதி களவிஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நாலடி கால்வாய் புனரமைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி பிற்பகல் இது தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
7.பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனர்த்த நிலைமையினைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக கால்வாய் புனரமைப்பு மேற்கொள்ளவும் தொடர்ந்து அதனை சீர்திருத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
8.மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் முன்னாயத்த கலந்துரையாடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகர மரங்களை அகற்றுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இணைந்து தீர்மானங்களை மேற்கொள்ளவும், தீர்வு காணப்படாத சந்தர்ப்பத்தில் அப்பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்கவுக்கவும் ஏற்கனவே சுற்றுநிருபம் உள்ளதால் தேவையற்ற ஆபத்துக்களை தவிர்க்க கூடிய வழிவகைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து நெடுந்தீவு, காரைநகர் மற்றும் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வீதிப் புனரமைப்பு நடவடிக்கைக்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலின் ஒரு அங்கமாக சுற்றாடல் குழுக்கூட்ட விடயங்களும் ஆராயப்பட்டன. இவ் விடயங்களான ஒலி பெருக்கிகளின் அதிக இரைச்சல் காரணமாக பொதுமககளின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அசௌகரிக விளைவிக்கப்பட்டால் குறித்த பிரிவு கிராம உத்தியோகத்தர் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட முடியுமென அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் தவிசாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டது. தொடர்ந்து திண்மக்கழிவு அகற்றல், டெங்கு கட்டுப்பாடு மற்றும் வளிமாசடைதல் உள்ளிட்ட தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும் ஒவ்வொரு மாதத்திலும் குறித்த ஒரு தினத்தில் பிரதேச செயலாளர்கள், உள்ளூர் அதிகாரசபை உறுப்பினர்கள் ,பொலிசார் மற்றும் கிராம மட்ட அமைப்புகள் இணைந்து கிராம மட்ட பிரச்சினை தொடர்பாக கலந்துரையாட சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இந் அனர்த்த நிலைமைகளில் கடந்த காலங்களை போன்று பொலிஸ் மற்றும் முப்படைகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. ரி. என். சூரியராஜா, பிரதேச செயலாளர்கள், மாவட்ட பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், முப்படைகளின் அதிகாரிகள், துறைசாா் திணைக்களத் தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


