அறிவிக்கப்படாத சொத்துக்கள் குற்றவியல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க, அரச அதிகாரிகள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த விபரங்களைச் சமர்ப்பிப்பது சட்டரீதியான கடமை என கடுமையாக நினைவூட்டியுள்ளார்.
சட்டப்பூர்வமாக அறிவிக்கப்படாமல், ஒரு மாதத்திற்கு ரூபா 100,000 போன்ற குறைந்த வருமானம் கொண்ட ஒருவர், மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என திசாநாயக்க வலியுறுத்தினார். சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது இலங்கையின் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிலர் தங்கள் சொத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கும் அதேவேளையில், சிலர் தங்கள் சொத்துக்களை மூன்றாம் தரப்பினரின் பெயர்களில் மறைக்க முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
”ஒரு சொத்து உங்கள் பெயரில் இல்லை என்பதற்காக அது உங்களுக்குச் சொந்தமானது இல்லை என்று அர்த்தமில்லை,” என்றும் அவர் எச்சரித்தார்.
ஒரு சந்தேகம் அல்லது உத்தியோகபூர்வ முறைப்பாடு இருந்தால், இலஞ்சச் சட்டத்தின் 84ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளைத் தொடங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்றும் திசாநாயக்க தெரிவித்தார்.
ஒருவர் தனது சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பதை விளக்க முடியாவிட்டால், அதே சட்டத்தின் 109ஆவது பிரிவின் கீழ் அவர் மீது வழக்குத் தொடரப்படலாம்.
முழுமையான வெளிப்படுத்தல் கலாச்சாரம் ஊழலைக் குறைப்பதற்கும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். “அனைவரும் தங்கள் சொத்துக்களை நேர்மையாக அறிவித்தால், இந்த நாட்டில் ஊழலை நாம் கணிசமாகக் குறைக்கலாம்,” என்றும் அவர் கூறினார்.

