ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது
களுத்துறை குற்றப் பிரிவினர், ஹம்பாந்தோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கி வந்த கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள், அத்துடன் போதைப்பொருளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிகாரிகள், ICE உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கொள்கலன்கள் மற்றும் போதைப்பொருள் உற்பத்திக்குரிய பல்வேறு உபகரணங்களையும் கண்டெடுத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் ‘சுரங்காவின்’ கூட்டாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் இன்று பனாகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்தோனேசியாவில் அண்மையில் ஐந்து பாதாள உலகக் குழுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட சமீபத்திய ICE உற்பத்தி நிலையம் இதுவாகும்.
இதற்கு முன்னதாக, நுவரெலியா, மிடெனிய, நெட்டொலிபிட்டிய மற்றும் கண்டானை ஆகிய இடங்களில் இதுபோன்ற ICE உற்பத்தி தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

