தியாகி தீபம் திலீபனின் நினைவு ஊர்திக்கு காரைதீவில் முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள்..!
தியாகி திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணமானது இன்றைய தினம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் துசானந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஊர்திப் பயண திருக்கோவிலில் ஆரம்பித்து பொத்துவில் ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்களின் அஞ்சலியினைத் தொடர்ந்து ஊர்தியானது காரைதீவினை அடைந்தது.
காரைதீவில் முன்னாள் தவிசாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச கிளைத் தலைவருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் அஞ்சலி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஊர்தியானது உணர்வுபூர்வமாக வரவேற்கப்பட்டு பொது மக்களின் அஞ்சலிகள் இடம்பெற்றன. இதன்போது காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது ஜெயசிறில் அவர்கள் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மக்களுடன் இணைந்து மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் காரைதீவு பிரதேசத்திலிருந்து நினைவு ஊர்தியினை பற்றோடு வழியனுப்பி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


