வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் மீண்டும் தலைதூக்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு
தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தங்கள் இழந்த அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக, வடக்கு மற்றும் தெற்கில் இனவாத அரசியல் போக்குகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற வடக்கு தென்னை முக்கோணத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத அரசியல் ஒருபோதும் மக்களுக்கு நன்மை பயக்காது எனவும் அவர் கூறினார்.
”வடக்கில் உள்ள இனவாதம் அரசியல்வாதிகளின் ஒரு கருவி. தெற்கில் உள்ள இனவாதம் ஒரு அரசியல் கருவி. தோல்வியடைந்த அரசியல்வாதிகள் மீண்டும் தலையெடுப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு அபாயகரமான கருவியே இனவாதமாகும்.
நாட்டில் இனவாத அரசியலுக்கு அரசாங்கம் மீண்டும் இடமளிக்காது என நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். மக்களாகிய நீங்களும் எந்தவொரு இனவாதத்தையும் நிராகரிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

