இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவு: 2000 ரூபா நினைவுப் பணத்தாள் அறிமுகம்
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், “சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை” (Stability for Prosperity) என்ற கருப்பொருளின் கீழ், இன்று 2000 ரூபா நினைவுப் பணத்தாள் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, இந்தப் பணத்தாளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் இன்று காலை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
முன்பக்கம்: மத்திய வங்கியின் தலைமைக் காரியாலயம், கொழும்பு கலங்கரை விளக்க கடிகாரக் கோபுரம், கொழும்புக் காட்சிகளின் பின்னணியுடன் 75ஆவது ஆண்டு நிறைவு இலச்சினை என்பன இந்தப் பணத்தாளின் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
பின்பக்கம்: இலங்கையின் வரைபடம், அல்லி மலர் மற்றும் மத்திய வங்கியின் இலட்சிய வாசகம் என்பன பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
கண்களுக்குப் புலப்படாதவாறு வடிவமைக்கப்பட்ட அச்சிடல் முறைகள் மற்றும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பணத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 50 மில்லியன் பணத்தாள்கள் அச்சிடப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மூலம் படிப்படியாகப் புழக்கத்திற்கு விடப்படும்.
இந்தப் பணத்தாள், நாட்டின் முன்னேற்றம், ஸ்திரத்தன்மை மற்றும் உறுதியுடைமை ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது.


