“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு

“வெளியே போ கழுதை” என ரணில் தம்மை திட்டியதாக சிஐடி பணிப்பாளர் ஷானி குற்றச்சாட்டு

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விசாரணை தொடர்பில், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தன்னைக் “கழுதை” எனத் திட்டி, தனது அலுவலகத்திலிருந்து வெளியே தள்ளியதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) பணிப்பாளர் SSP ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

 

அப்போதைய அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் கணக்கிற்கு மெண்டிஸ் நிறுவனத்திடமிருந்து மூன்று காசோலைகள் வந்திருப்பது தனது கவனத்துக்கு வந்ததாக SSP ஷானி கூறியுள்ளார். இது குறித்து தான் கேள்வி எழுப்பியபோது, அப்போதைய பொது பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் இந்த விடயத்தில் அக்கறை கொண்டிருப்பதாகவும், அதனால் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அழைக்குமாறும் தனக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

 

நெறிமுறைகள் காரணமாக பிரதமரை நேரடியாகத் தொடர்புகொள்ள முடியாததால், தனது உயர் அதிகாரியான DIG ரவி சேனவிரத்ன மூலம் பொலிஸ் தலைவருக்கு SSP ஷானி அறிவித்துள்ளார். பின்னர், இரவு 10 மணிக்கு ரணிலின் வீட்டிற்கு அழைக்கப்பட்ட ஷானி, அந்த விடயத்தை கைவிடுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அரசியல்வாதிகளுக்குப் பணம் கொடுப்பது பொதுவானது என்று ரணில் கூறியதாகக் கூறப்படுகிறது.

 

இருப்பினும், இந்த அழுத்தத்திற்கு SSP ஷானி இணங்கவில்லை. ரணில் விக்கிரமசிங்க கூறியபடி தன்னால் செயற்பட முடியாது என்று அவர் அவரிடம் தெரிவித்தார். அப்போது, ​​அட்டோனி ஜெனரல் மறுநாள் வந்து தன்னுடன் இது குறித்து பேசுவார் என்று ரணில் தெரிவித்ததாகவும், அதற்கு SSP ஷானி, சட்டமா அதிபர் ஒரு கடிதத்தில் அறிவுறுத்தல்களை வழங்கினாலும், அதன்படி தன்னால் செயற்பட முடியாது என்று உறுதியாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ரணில், “வெளியே போ, நீ ஒரு கழுதை” என்று ஷானியைத் திட்டி, அவரை வெளியே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த விவரங்களை SSP ஷானி அண்மையில் ஒரு யூடியூப் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் அரசாங்கத்தால் SSP ஷானி அபேசேகர மற்றும் DIG ரவி சேனவிரத்ன ஆகியோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நிர்வாகத்தின் கீழ், ரவி சேனவிரத்ன பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேவேளை, SSP ஷானி அபேசேகர மீண்டும் பொலிஸ் சேவையில் நியமிக்கப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகப் பதவி வகிக்கிறார்.

Recommended For You

About the Author: admin