மஹிந்தவை கைது செய்ய திட்டம் இல்லை: அரசாங்கம் திட்டவட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டதை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச (MR) கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என மறுத்துள்ளது.

கடந்தகாலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் பக்கச்சார்பற்றதாகவும், சுயாதீனமான அமைப்புகளால் கையாளப்படுவதாகவும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மற்றும் ஏனைய சிரேஷ்ட பிரமுகர்களை கைது செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் அனந்த விஜேபால, “யாரையும் கைது செய்ய முயற்சிகள் இல்லை. அது எங்கள் நோக்கம் அல்ல” என்று கூறினார்.

கடந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்ட குற்றங்களை மட்டுமே அரசாங்கம் விசாரித்து வருவதாக அவர் வலியுறுத்தினார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID), இணையக் குற்றப் பிரிவுகள் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) போன்ற சுயாதீன அமைப்புகளால் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

“ஒருவர் முன்னாள் ஜனாதிபதியாகவோ, அமைச்சராகவோ, பிரதி அமைச்சராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சாதாரண நபராகவோ என்பது முக்கியமல்ல. குற்றம் இழைக்கப்பட்டிருந்தால், அவர்கள் பதிலளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் ரவிந்திர மனோஜ் கமகே, முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் கைது ஒரு “அரசியல் பழிவாங்கல்” செயல் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin