இலங்கையின் பல பாகங்களுக்கு வெப்ப எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அத்துடன் அம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திணைக்களத்தின்படி, இந்த 10 மாவட்டங்களுக்கும் நாளை (ஆகஸ்ட் 20) முதல் அமுலாகும் வகையில் ‘அம்பர்’ (Amber) நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது, குறித்த மாவட்டங்களின் சில இடங்களில் ‘கவனிக்க வேண்டிய’ (Caution) மட்டத்தை எட்டக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீண்ட நேரம் வெயிலில் இருப்பதாலும், செயற்பாடுகளினாலும் உடல் சோர்வடைய வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய சூழ்நிலைகளில் தொடர்ந்து செயற்படுவது வெப்பத்தினால் ஏற்படும் தசைப்பிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


